நாமக்கல்லில் அமைந்துள்ள மிகவும் பழமையான குடைவரைக் கோயிலான அரங்கநாதர் திருகோவிலில் சொர்க்கவாசல் காண வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 54ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முழுவதும் உள்ள பழமையான பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பெருமாளை வணங்கும் பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதமிருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி வருகின்ற 02.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாமக்கல்லில் அமைந்துள்ள மிகவும் பழமையான குடைவரைக் கோயிலான அரங்கநாதர் திருகோவிலில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி அரங்கநாதர் திருக்கோவிலில் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு தனியார் பங்களிப்புடன் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 54 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
இதற்காக கடலை மாவு 1000 கிலோ, சர்க்கரை, 500 கிலோ, நெய் 5 லிட்டர், கடலெண்ணெய் 450 லிட்டர், முந்திரி 25 கிலோ, திராட்சை 20 கிலோ மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை 5 கிலோ உள்ளிட்ட பொருட்களை கொண்டு 54,000 லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.