துபாய், கொழும்பில் இருந்து உள்ளாடைக்குள் கடத்தி வந்த ரூ. 1 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கை வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டறிந்தனர். இவரிடம் இருந்து ரூ. 18 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 363 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதுப்போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 24 லட்சத்தி 84 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் இருந்த விமான நிலைய ஊழியர் திடீரென புறப்பாடு பகுதியில் உள்ள கழிவறையில் இருந்து வெளியே முயற்சிப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டனர். உடனே அந்த ஊழியரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சோதனை செய்தனர்.
அப்போது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 300 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இலங்கை வாலிபர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடியே 58 லட்சத்தி 5 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விமான நிறுவனஊழியர் உள்பட 3 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: குப்பை கூடமாக காட்சி அளிக்கும் மெரினா...!!