திருவண்ணாமலை : 36 - வது இளையோர் மாநில தடகள போட்டி...! புதிய சாதனை படைத்த வீரர்கள்...!

திருவண்ணாமலை : 36 - வது இளையோர் மாநில தடகள போட்டி...! புதிய சாதனை படைத்த வீரர்கள்...!
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை மாவட்ட தடகளச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில தடகள சங்கமும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 36 வது இளையோர் தடகள போட்டிகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியினை சமூக நலன், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று தினங்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் 14,16,18 மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் சங்கிலி குண்டு எறிதல், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நீளம் தண்டுதல் ஆகியவற்றில் 3 பேர் புதிய சாதனையை படைத்து உள்ளனர். 16 வயதிற்கு உட்பட்ட சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கோவை அதலெடிக் கிளப்பை சேர்ந்த எஸ்.ஜி. ஹர்சவர்தன் என்பவர் 49.66 மீட்டர் சங்கிலி குண்டு எறிந்து சாதனை படைத்து இருந்தார். தற்போது அவரே மீண்டும் 51.94 மீட்டர் சங்கிலி குண்டு வீசி புதிய சாதனையை படைத்து உள்ளார்.

அதே போன்று 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் புதுக்கோட்டை தடகள சங்கத்தை சேர்ந்த சூர்யா என்பவர் 10 நிமிடம் 15.84 வினாடியில் ஓடி சாதனை படைத்து இருந்தார். தற்போது அவரது சாதனையை நீலகிரி தடகள சங்கத்தை சேர்ந்த அகஞ்சாகிர்கிட்டா என்பவர் 9 நிமிடம் 51.04 வினாடியில் ஓடி புதிய சாதனையை படைத்து உள்ளார்.

மேலும், 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தபிதா என்பவர் 5.72 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்து இருந்தார். தற்போது அதனை  சென்னையைச் சேர்ந்த தடகள சங்கத்தை சேர்ந்த பிரதிக்ஷா யமுனா என்பவர் 5.89 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையை படைத்து உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com