அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பு
பருவமழை காலத்தில் எந்த பாதிப்பு வந்தாலும் சமாளிப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. இன்று காலை சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு கொசு வலைகளை வழங்கிய பின்னர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
சிலைகளை பாதுகாக்க அறைகள்
அப்போது பேசிய அவர், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இருக்கின்ற சிலைகளை பாதுகாக்க ஏற்கனவே நீதிமன்றம் பாதுகாப்பு அறைகளை உருவாக்க உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்பு அறைகளை ஏற்படுத்துகின்ற பணி கடந்த காலங்களில் தொய்வு பெற்றிருந்தது என தெரிவித்தார்.
1200 பாதுகாப்பு அறைகள் அமைக்க டெண்டர்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வடபழனியில் உள்ள பரத்வாஜ் சுவாமி கோயிலில் மாதிரி பாதுகாப்பு அறை ஏற்படுத்தினோம். அது உறுதித் தன்மை உடையது என்று கண்டறியப்பட்டு 1200 பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது.
அந்தந்த மண்டல இணை ஆணையர்களுக்கு அதற்கு உண்டான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது, இந்த பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும்.
இந்து அமைப்புகளை விட சிறந்து செயல்படும் அரசு
இந்து அமைப்புகளிடம் இருக்கும் பொழுது திருக்கோவில்கள் பராமரிக்கப்படுவதை விட கூடுதலான அக்கறை கொண்டு இந்த தமிழ்நாடு அரசு திருக்கோயில் பராமரிப்பில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது.