கண்மாயில் டன் கணக்கில் செத்து ஒதுங்கிய மீன்கள் .!காரணம் என்ன?

Published on
Updated on
2 min read

தேனி அருகே கண்மாயில் டன் கணக்கில்  மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளது. போடி மீனாட்சிபுரம் கண்மாயில் ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட டன் கணக்கில் செத்து ஒதுங்கியுள்ள மீன்களால் வெளிநாட்டுப் பறவைகள், உணவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கம்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கொட்டகுடி ஆறு அணை  பிள்ளையார் அணைக்கட்டு ராஜ வாய்க்கால் மூலம் இந்த  கம்மாய்க்கு நீர்வரத்து உள்ளது. இந்த கம்மாயை நம்பி ஆயிரம் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவிலான மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து இன்றி கம்மாய்க்கு நீர்வரத்து இன்றி வரண்டு போகும் நிலையில் உள்ளது.

தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டகுடி நீரானது மீனாட்சியம்மன் கமாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் கலந்து செல்வதால் நீர் மாசடைந்து செல்கிறது. இதன் காரணமாக கம்மாயில் குறைந்த அளவு நீரில் உள்ள மீன்கள் அனைத்தும் டன் கணக்கில்  செத்து கரை ஒதுங்கி உள்ளது. இதன் காரணமாக  அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது உடன் நீர் அனைத்தும் மாசடைந்து மீன்கள் இன்றி காணப்படுகிறது. 

இந்த மீனாட்சியம்மன் கம்மாயில் பல்லாயிரம் மைல்கள் கடந்து வரும் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இரைக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது மீன்கள் அனைத்தும் செத்து கரை ஒதுங்கியதால் கம்மாயில் மீன்கள் இன்றி வெளிநாட்டு பறவைகள் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து வந்து உணவு கிடைக்கும் என வந்த பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் தற்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

போடி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வைத்த நிலையிலும் போடி பகுதியில் உள்ள கழிவுநீர்  வாய்க்கால் வழியாக  சுவையான நீரில் கலந்து மாசடைந்து வருவதால் கம்மாய் நீர் யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி உள்ளது.  மேலும் இந்த நீர் மீன்கள் கூட வசிக்க முடியாத நட்சு நீராக மாறி இருப்பது மிகுந்த வேதனை அடைய வைத்துள்ளது.  

இயற்கையாகவே கிடைக்கக்கூடிய மீன்களில் ஒன்றான ஜிலேபி கெண்டை மீன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த கன்மாயில் தற்போது அனைத்தும் செத்து கரை ஓதுங்கியதால் வரும் காலங்களில் மீன்கள் இல்லாத கம்மாயாக மாறும் நிலைக்கு தற்போது மீனாட்சி அம்மன் கம்மாய் மாறி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை செயல்பட வைத்து போடி பகுதியில் உள்ள கழிவு நீர்களை ராஜ வாய்க்காலில் கலக்காத வகையில் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தி கொட்டகுடி ஆற்று சுவையான நீரை மாசுபட வைக்காமல் இக்காம்மாய்க்கு அனுப்பி மீன்கள் இறக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீர்வள துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் செயல்படாமல் இருப்பதே இது போன்ற நிகழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. நம் இயற்கை கொடுக்கக்கூடிய அற்புதமான தண்ணீரை மாசடையாமல் வைப்பதற்கு போடி பகுதி மக்களும் முன்வர வேண்டும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com