சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல முடியாமல் வாகனங்களிலேயே மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட காவல் துறை முறையான போக்குவரத்துக்கு வழி வகை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளதால், சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று குளிர்ச்சியான கால நிலையை அனுபவிக்க உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலா பயனிகளின் 90 சதவீத சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். மேலும் உதகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், ரம்ஜான் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை - மைசூர் சாலை, உதகை - கோவை சாலை மற்றும் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் சாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா ஸ்தலங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடியாமல் சாலையிலேயே காத்திருக்கம் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மாவட்ட காவல் துறை உரிய முறையில் திட்டமிட்டு, சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.