கிராம மக்கள் கோயிலுக்குள் உள்ளிருப்புப் போராட்டம்!

கிராம மக்கள் கோயிலுக்குள் உள்ளிருப்புப் போராட்டம்!

விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான  தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இந்து சமய நிலைத்துறை கோயிலுக்கான பராமரிப்பு பணிகளை செய்ய முன் வராததால் கிராம மக்களே கோவிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா  பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றபோது மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த பட்டியலின மக்கள் கோவிலில் உள்ளே நுழைய முயன்ற போது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய கூறி பட்டியலின மக்களை அனுப்பி வைத்து விட்டனர். கோவில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என பட்டியலின மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 இதனை அடுத்து கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்களும் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இரண்டு தரப்பினரிடையே இரண்டு முறையும் கோட்டாட்சியர் தலைமையில் ஐந்து முறை சமாதான கூட்டங்கள் நடைபெற்றது. இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் கோவிலுக்குள் கிராம பெண்கள் குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com