
விருதுநகர் | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அத்திகுளம் பகுதியில் சுமார் 1500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கழிவுநீர் செல்ல புதிய கால்வாய் அமைப்பதற்காக குழி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது வரை கால்வாய் அமைப்பதற்கான பணி செய்யாமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் குழிக்குள் கீழே விழுந்து காயமடைந்தும் உள்ளதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க | சுரங்கப்பாதை அமைக்க கோரிய மக்கள்...! சாலை மறியல் போராட்டம்...!
தோண்டப்பட்ட குழியின் அருகே இரண்டு வீடுகள் தற்போது மழைக்கு இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான பெண்கள் தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழியில் கால்வாய் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.