” மருத்துவ மாணவர்கள் ஒதுக்கீடு விஷயத்தில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்.

” மருத்துவ மாணவர்கள் ஒதுக்கீடு விஷயத்தில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்.

மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

எம்.டி, எம்.எஸ் போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு,  மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு, 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என  கடந்த 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

 எந்த மாநிலத்திலும் 30 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை எனவும், அரசின் கொள்கை முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்லாமல் அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் விரோதமானதாக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கிராமப்புறங்கள், தொலைதூர பகுதிகள், மலைமலைப் பகுதிகளில் அரசு மருத்துவர்களாக பணியாற்றியவர்களுக்கு 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கப்படுவதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதவிட ஒதுக்கீடு வழங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என அரசு மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் 2,266 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 330 அரசு மருத்துவமனைகளும் உள்ளதால், அங்கு அதிக மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர்... அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் என கூற மனுதாரர்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் அரசு மருத்துவர்கள், பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளிலேயே பணியாற்றுவர் எனத் தெரிவித்த நீதிபதிகள், கிராமப் புறங்கள், தொலைதூர பகுதிகள், மலைப்  பகுதிகளில் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தவே ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதால் இதுசம்பந்தமான அரசின் கொள்கை முடிவில் எந்த தவறும் இல்லை; அதில் தலையிட முடியாது எனக் கூறி, மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.