
2022 ம் ஆண்டுக்கான இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை (NIRF) இன்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். அதில் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி, மெட்ராஸ் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதல் 10 இடங்களை பெற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலாண்மை, மருத்துவம், கட்டிடக்கலை ஆகிய 11 பிரிவுகளின் கீழ் வரும் கல்லூரிகளின் தர வரிசை பட்டியலையும் NIRF வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு பிரிவுக்கும் சராசரியாக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்படி கணக்கிடப்படும் சராசரி மதிப்பெண்கள் ஒவ்வொரு பிரிவுகளுடன் வேறுபடும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஐஐடி மெட்ராஸ் ஒட்டுமொத்த கலோரிகளின் பட்டியலிலும், பொறியியல் கல்லூரிகளின் பட்டியலிலும் முதல் இடம் பிடித்துள்ளது.
அதே போல் மருந்தக பிரிவின் கீழ், ஜாமியா ஹாம்டர்டு கல்லூரி, டெல்லி முதல் இடத்தையும், தமிழகத்தில் நீலகிரியை சேர்ந்த JSS மருந்தியல் கல்லூரி 6 வது இடத்தை பிடித்துள்ளது. கல்லூரிகளின் பட்டியலில் டெல்லியை சேர்ந்த 2 கல்லூரிகள் முதல் இரண்டு இடங்களை பெற்ற நிலையில் தமிழகத்தில் ப்ரெசிடெண்சி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி 3 மற்றும் 4- வது இடங்களை பெற்றுள்ளது. பல் மருத்துவத்தில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 3ம் இடத்திலும், மருத்துவத்தில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி 3 ம் இடத்தில் உள்ளன. பல்கலைக்கழகங்களின் பட்டியலில் கோவை அமிர்த விஷ்வா வித்யாபிரீதம் 5 ம் இடத்திலும் , வேலூர் VIT பல்கலைக்கழகம் 9 ம் இடத்திலும் இடம் பெற்றுள்ளன.