" பள்ளிக் கல்வித் துறையின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது .." பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்...!

" பள்ளிக் கல்வித் துறையின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது .."  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்...!

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் அணியை தேர்வு செய்யாத பள்ளிக் கல்வித் துறையின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், 

" பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். புதுச்சேரி சார்பாக தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது, தமிழகப் பள்ளி மாணவர்கள் அணியைத் தேர்வு செய்யாத பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக இருப்பதால், சர்வதேச விளையாட்டு போட்டிகளில், முன்னெப்போதையும் விட அதிகமான பதக்கங்களை இந்தியா பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் நம் நாட்டை முன்னேற்ற, தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம், கேலோ இந்தியா திட்டம், விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் மாண்புமிகு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.  

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி  அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் பொறுப்பற்ற இந்தச் செயலை, வன்மையாகக் கண்டிக்கிறேன்".

இவ்வாறு அந்த பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதையும் படிக்க    | " கையில் செங்கோலை வைத்திருந்தால்.... தமிழகத்தையே வைத்திருப்பது போல நினைப்பு ....? " - கனிமொழி எம். பி.