கேந்திரிய வித்யாலயா: தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு; தனி நீதிபதி உத்தரவு ரத்து!

கேந்திரிய வித்யாலயா: தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு; தனி நீதிபதி உத்தரவு ரத்து!

கேந்திரிய வித்யாலயாக்களில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை, துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  தமிழகம் முழுவதும்  கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக  துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என கேந்திரிய வித்யாலயா விதிகள் உள்ளதாக கூறி, 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையும் படிக்க:சென்னை வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!