ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவு: “உங்களின் சிஸ்டமே சரியில்லை” - நீதிபதி விமர்சனம்

ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவு:  “உங்களின் சிஸ்டமே சரியில்லை”  -  நீதிபதி விமர்சனம்

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில் அனைத்து தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டதை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், 

"கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்திய ராணுவம் சார்பாக வெளியிட்ட ராணுவ வீரர்  பணியிடத்திற்கான அறிவிப்பில் விண்ணப்பித்து, அனைத்து தகுதி தேர்விலும் கலந்து கொண்டு உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோம். 

இதை தொடர்ந்து,  2018 ஜூலை 29-ம் தேதி வெளியிட்ட தேர்வு முடிவில்,  22 வீரர் பெயர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் எங்களது பெயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, காலி இடங்கள் இல்லை என்று தெரிவித்தார். ஆனால், இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேர் தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இது சட்டவிரோதம்.

எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2019 ஆண்டு மனு தாக்கல் செய்ய மனுவில்  கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனை படித்து பார்த்த நீதிபதி, ” ஒன்றிய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறானது;  தவறான தகவல்களை சீலிடப்பட்ட கவரில் கொடுத்துள்ளீர்கள்;  உங்களுக்கு  அதிகாரிகள் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே தவறாகத்தான் உள்ளது. எல்லா அதிகாரிகளையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சில அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு கூட சரியான தகவல்களை தருவதில்லை”, எனவும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து,  கணினியில் பதிவாகியுள்ள தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் இந்தியா முழுதும் இதே முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது எனவும் ஒன்றிய  அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ” நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே இவ்வாறு தவறான தகவல்களை தரலாமா?, பிறகு பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கும்?”  என வினவிய  நீதிபதி  “உங்களின் சிஸ்டமே சரியில்லை”, என கூறி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இதையும்  படிக்க      | பள்ளியில் சாதிய பாகுபாடு... படித்தது போதுமென குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்!!