” எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன” - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

” எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன” - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

சென்னை பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை  மாநகராட்சி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, சென்னை மாநகராட்சி சார்பில் எத்தனை நடத்தப்படுகின்றன?. அந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளன?. கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?. என  அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், கல்வித்துறை துணை ஆணையருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 119 ஆரம்ப பள்ளிகள் 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர் நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் ஆகியவற்றை மாநகராட்சி நடத்துவதாகவும், 1,345 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், மீதமுள்ளவற்றை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி தேர்வு மூலமாகவும், பணியிடமாற்றம் மூலமாகவும் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன? எந்த விதிகளும் இல்லாவிட்டால் எந்த அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன? இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க   | மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்தும் கிடைக்காத பெண்கள்..!