வேலைவாய்ப்பு வழங்கும் இளைஞர் திறன் திருவிழா...! திறன் மேம்பாட்டு பயிற்சி...!

வேலைவாய்ப்பு வழங்கும் இளைஞர் திறன் திருவிழா...! திறன் மேம்பாட்டு பயிற்சி...!

மத்திய அரசின் தீன்தயாள் உபாத்தியாயா கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. படித்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் கல்வி அறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் திட்டமாக இருக்கிறது மத்திய அரசின் தீன் தயாள் உபாத்யாயய கௌசல்யா யோஜனா திட்டம். 

ஊரக பகுதியில் உள்ள மகளிர் இத்திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இதனைத் தவிர கல்லூரிகளில் பட்டப்படிப்பை படித்துவிட்டு வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி அவர்களுக்கும் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தருகிறது தீன் தயாள் உபாத்தியாய திட்டம். திறன் மேம்பாட்டு பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சியை நிறைவு செய்யும்போது மத்திய  அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் அவர்களுக்கு எளிதான வங்கி கடன் கிடைக்கிறது. 

மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு வழங்கும் இளைஞர் திறன் திருவிழா இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும் மன்னார்குடி எம்எல்ஏவும் ஆன டிஆர்பி ராஜா கலந்துகொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற உள்ள இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணையினை வழங்கினார்.