அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி ..!

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி ..!

அதிகளவில் ஆசிரியர் காலி பணியிடங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010-11 ம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில்  ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,  தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்  .

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன சிக்கல் உள்ளது? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவதேன்? நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க ஏன் நேரடி தேர்வு நடத்த முடியாது? எனக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைகழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமமான ஏஐசிடிஇ விதிமுறைப்படி உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என ஆயிரத்து 745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கபட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அதில் 556 பேர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், 425 இடங்கள் காலியாக உள்ளது, ஏஐசிடிஇ விதிமுறைப்படியான இடங்களில் ஆயிரத்து 189 காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காலியிடங்களை நிரப்ப முடியவில்லை என பல்கலைகழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், 2020-ல் தனி நீதிபதி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென உத்தரவு பிறப்பித்த பிறகு,  3 ஆண்டுகளுக்கு பிறகு தான் கடந்த செப்டம்பர் மாதம்  சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டதாக அதிருப்தி தெரிவித்தனர்.

இவ்வளவு காலியிடங்களை வைத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக பல்கலைகழகம் எப்படி செயல்படுகிறது என தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 

இடைப்பட்ட 3 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த 
நடவடிக்கை எடுக்காதது ஏன், 425 காலியிடங்களுடன் எப்படி செயல்படுகிறது என விளக்கமளிக்க பல்கலைகழக பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறினால்  பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டி வரும் எனவும் எச்சரித்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com