68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா:ஆதிக்கம் செலுத்திய கோலிவுட்!

68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா:ஆதிக்கம் செலுத்திய கோலிவுட்!

68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி பிரகாஷிக்கும் வழங்கப்பட்டது ...

68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா:

2020ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.  2020ம் ஆண்டு வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கும், தி அன்சங் வாரியர் படத்தில் நடித்த அஜய் தேவ்கனுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

இதைத் தவிர சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் வழங்கப்பட்டது.
இதேபோல திரைப்படத்தை தயாரித்த 2டி நிறுவனத்தின் உரிமையாளர் ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்பட்டது. இவ்வாறு சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை வென்றது.

இதையும் படிக்க: மீண்டும் ஓங்கிய ஓபிஎஸ் கை..! அதிமுக தேர்தலுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!

மண்டேலா திரைப்படம் சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குநருக்கான விருதை பெற்ற நிலையில், அதன் இயக்குநர் மடோன் அஸ்வின் விருதை பெற்றார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் சிறந்த தமிழ்படம் உள்ளிட்ட 3 விருதுகளை வென்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த லஷ்மிபிரியா சந்திரமெளலி, சிறந்த துணை நடிகைக்கான விருதையும், ஸ்ரீகர் பிரசாத் சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றனர். இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே, பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பாரெக்கிற்கு வழங்கப்பட்டது

விருதுபெற்ற நடிகர்கள் மற்றும் நடிகையருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும்அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.