பாண்டிச்சேரி டிரிப் போதும்.. கொஞ்சம் ஜெயிலுக்கு வாங்க..!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு வரும் 26-ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்:
சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாளே, இந்துக்களின் எழுச்சி நாள் என்றார். இது குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
தலைமறைவான கனல் கண்ணன்:
கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார். இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கைதான கனல் கண்ணன்:
இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு அவரை தேடி சென்றனர். இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜார்:
இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி, வரும் 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு சென்ற போது, கனல் கண்ணன் ஆதரவாளர்கள் வாகனத்தை வழி மறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் நாளை மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.