நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தன் அசாத்திய நடிப்பின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கிய கலைத்தாயின் தவப்புதல்வனாக நடிகர் சிவாஜி கணேசன் கொண்டாடப்படுகிறார்.
1928-ம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்த வி.சி.கணேசன், ஏழாவது வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் முகாமிட்டிருந்த மதுரை ஸ்ரீபாலகானசபா என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார். 
சிறுவனாக மேடையில் ஏறியவர், பெண் வேடம் உள்பட பல்வேறு வேடங்களில் நடித்தவரை கலைத்தாயின் கருணைக் கரங்கள் பற்றியது. 1946-ம் ஆண்டு திராவிடர் கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுத்தில் உருவான சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தல் கணேசனின் நடிப்பு அங்கிருந்த பெரியாரை வெகுவாக கவர்ந்தது. 
அப்போது மேடையில் ஏறியவர் வி.சி.கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்ற பெயரிட, அந்த பெயரே காலத்துக்கும் நிலைத்து நின்றது. இதைத் தொடர்ந்து நாடக உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான சிவாஜி கணேசனுக்கு நல்ல தொடக்கமாகவே அமைந்தது பராசக்தி.
தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்திய சிவாஜி அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு இவற்றையும் மாற்றியமைத்து ரசிகர்களை இன்பக் களிப்பில் மூழ்கடித்தார்.
பிற நடிகர்களைப் பொறுத்தவரை அதிகபட்சம் அவர்களது கண்கள் நடிக்கும், ஆனால் சிவாஜியை பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், அவரது கன்னமும், தலைமுடியும் நடிக்கும் என்று. 
சிவாஜி கணேசன் என்ற ஒரு நடிகர் இல்லையென்றால் கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஏன்? இதிகாசத்தில் வந்த திருமால், கர்ணன், சிவபெருமானின் உருவமே அறியாமல் போயிருக்கலாம் என்று கூட கூறலாம். 
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் போல எந்த நடிகரும் நடித்துப் பார்ப்பதற்கு முயற்சிக்கலாமே தவிர, இன்னொரு சிவாஜி என்றைக்குமே உருவாகி விட முடியாது என்பதை தமிழ் சினிமா அறிந்திருக்கும். சிவாஜி எனும் நட்சத்திரம் திரைவானில் என்றென்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
இதையும் படிக்க: வலுப்பெரும் எடப்பாடி கூட்டணி