நடிகை மீரா மிதுன் காணவில்லை...! தாயாரின் புகாரால் பரபரப்பு...!

நடிகை மீரா மிதுன் காணவில்லை...! தாயாரின் புகாரால்  பரபரப்பு...!

நடிகை மீரா மிதுன் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி அவரது தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரபல மாடலான மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமின் பெற்ற நிலையில், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றபோது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அவர் எங்குள்ளார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவரது குடும்பத்தாரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் தாயார் சியாமளா தனது மகளை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரை காணவில்லை என தற்போது அவரது தாயாரே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.