7 நாட்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

7 நாட்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏழு நாட்களுக்குப் பிறகு இன்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது. 

தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு அன்றாடம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தேக்கங்காட்டில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக முகாமிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்தது.

இதனால் கடந்த 7 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவி வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் சுருளி அருவி பகுதியில் இருந்து யானைக் கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததால், 7 நாட்களுக்குப் பிறகு இன்று சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவி பகுதியில் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:"ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், அது உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்" இலங்கை அதிபர் கருத்து!