பிக்பாஸ் ஜூலியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய இளைஞன்... போலீசில் புகார்..!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக காதலன் மீது பிக்பாஸ் புகழ் ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் ஜூலியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய இளைஞன்... போலீசில் புகார்..!

சென்னை பரங்கி மலை ஈரோப்பியன் லேன் பகுதியைச் சேர்ந்தவர் மரியா ஜூலியானா (26). பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான இவர் நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2017ஆம் ஆண்டு மனிஷ் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்த நிலையில், மனிஷுக்கு தான் இருசக்கர வாகனம்,16 கிராமில் தங்க செயின், பிரிட்ஜ் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்து 2.30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக ஜூலி புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் திடீரென மனிஷ் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாக தெரிவித்து காதலை முறித்து கொண்டதாக தெரிவித்துள்ள ஜூலி, மனிஷ் தொடர்ந்து தன்னிடம் மேலும் பணத்தை பறிக்கும் வகையில் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் மனிஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.