சித்ரா மரணம்.. கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சித்ரா மரணம்.. கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

ஹேம்நாத் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கணவர் ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

சித்ராவின் தந்தை காமராஜ் மனு தாக்கல்

இதனிடையே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.

அவரது வாதத்தில், தனது மகள் சித்ராவை நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என ஹேம்நாத் சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். ஹேம்நாத் ஒரு பெண்ணோடு இருப்பதை பார்த்ததால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் காமராஜ் மனுவில் கூறியிருந்தார்.

ஹேம்நாத் தரப்பு விளக்கம்

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கேள்வி

மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

ஹேம்நாத் தரப்பு பதில்

அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் தன்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும் என்றும்  ஹேம்நாத் தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.