5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி...

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி...

பவர்ஸ்டார் என்று கன்னடத் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று காலையில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் தனியார் மருத்துவமனையில் அவர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 46 வயதில் மாரடைப்பால் அவர் மரணமடைந்தது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததை அவரது ரசிகர்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் புனித் ராஜ்குமார் உடலை பார்க்க திரண்டு வருகின்றனர். ரசிகர்களின் அஞ்சலிக்காக பெங்களூரு கண்டிர்வா மைதானத்தில் புனித் ராஜ்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு விடிய விடிய இரவு முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடியும் நடத்தினர்.  புனித் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டிருக்கும் மைதானத்தின் வெளியே ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்த படையெடுத்து வருவதால் பெங்களூரு நகரம் ஸ்தம்பித்து போயிருக்கிறது. பெங்களூரு முழுவதும் 5 அயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் மகள்  இன்று இரவு வருகிறார். அவர் வந்த பின்னர் நாளை அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் உடல் அருகிலேயே அவரது கடைசி மகன் புனித் ராஜ்குமாரின் உடலும் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.