தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான புகார் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு. .

தனுஷ்,  ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான புகார்  மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு. .

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக  நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு  எதிராக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை  ரத்து செய்யக் கோரியும்  நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சைதாப்பேட்டையில் உள்ள வழக்கின் விசாரணையின்ன்போதி இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடைவிதித்து கடந்த மார்ச் 29ஆம் தேதி உத்தரவிட்டது.  
  
பின்னர் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்ரமணியன், 2003ஆம் ஆண்டு சிகரெட் மற்றும்  புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம்  விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 5 ன் கீழ் தங்கள் மீதான புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டார். தணிக்கை வாரியம் சான்றளித்துள்ளதாகவும், புகார் கொடுப்பதற்கு முன்பு  விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்பதால் தங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தங்கள் புகாரில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனுக்களை ஏற்க கூடாது என்றும், அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க    |  கட்டு போட 50ரூ... ஸ்ட்ரெச்சர் தள்ள 50ரூ... அட்டூழியம் செய்யும் அரசு மருத்துமனை!!