சர்வதேச விருதுக்கு தேர்வான ஜெய்பீம்..!

கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படத்தில் தேர்வு..!

சர்வதேச விருதுக்கு தேர்வான ஜெய்பீம்..!

தடைகளை தாண்டி, விமர்சனங்களை தாண்டி, மிரட்டல்களை தாண்டி சர்வதேச அளவில் இடம் பிடித்திருக்கிறது ஜெய்பீம். கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஜெய்பீம். 1990-களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை 
பெற்றது. ஆனால் படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு விதமாக குற்றச்சாட்டுகளையும், மிரட்டல்களையும் விடுத்து வந்தனர். 

வன்னியர் சங்கத்தினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பிறகு நீதிமன்றத்தில் மனுவும் தொடுக்கப்பட்டது. படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்ட 
போதிலும், படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்த போதிலும் கூட, இன்று வரை படத்தின் மீதான எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துக் கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் இதனை பொருட்படுத்தாது சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த சென்று விட்டார். இந்த நிலையில், ஜெய்பீம் படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 2021-ம் ஆண்டுக்கான 
கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் ஜெய்பீம் படமும் இடம்பெற்றுள்ளது.