கலைவாணரின் பிறந்த நாள் இன்று ...மரியாதை செலுத்திய நடிகர் சங்கம்...

கலைவாணரின் பிறந்த நாள் இன்று ...மரியாதை செலுத்திய நடிகர் சங்கம்...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று  காலை நடிகர் சங்கத்தினர் மாலையிட்டு மரியாதையை செலுத்தினர்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்   :

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்  என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன்  தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் ,பாடகரும் ஆவார்.நாகர்கோயில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால் அவர் குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார்.

திரைத்துறையில் கால் பதித்த கலைவாணர் :

 இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் ஏழை சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார்.  திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். 

பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். 

மரியாதை செலுத்திய நடிகர் சங்கம் :


இத்தகைய பல அற்புதங்களை திரை உலகிற்கு அளித்த  முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று  காலை நடிகர் சங்கத்தினர் மாலையிட்டு மரியாதையை செலுத்தினர்.துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், அஜய் ரத்னம், பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உடன் இருந்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com