"இனி மேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம்" - கிச்சா சுதீப் - அஜய்தேவ்கன் இடையே காரசார விவாதம்!

இந்தி மொழி குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இடையே சமூகவலைதளத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

"இனி மேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம்" - கிச்சா சுதீப் - அஜய்தேவ்கன் இடையே காரசார விவாதம்!

கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனி மேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார். அவருக்கு பதிலளிக்கும் வகையில், கிச்சா சுதீப்பை டேக் செய்து பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்தி மொழியில் அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில், உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன்? உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திதான் நமது தாய்மொழியாகவும், தேசிய மொழியாகவும் அன்றும், இன்றும், என்றும் இருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிச்சா சுதீப், நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு தனக்கு புரிந்தது என்றும் நாங்கள் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக் கொண்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், தவறொன்றும் இல்லை சார், ஆனால் உங்கள் கேள்விக்கு தனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்ததாகவும், நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா சார் என குறிப்பிட்டுள்ளார். அஜய் தேவ்கன் பதிவுக்கு கிச்சா சுதீப்பின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

கன்னட ரசிகர்கள் உட்பட பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து, அஜய் தேவ்கனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆங்கிலத்தில் ஒரு பதிவை அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். அதில், தவறான புரிதலை சரி செய்தமைக்கு நன்றி சுதீப் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைப்பதாகவும், நாங்களும் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அஜய் தேவ்கன் பதிவிட்டுள்ளார். 

கிச்சா சுதீப் - அஜய்தேவ்கன் இடையே நடைபெற்ற இந்த காரசார விவாதம், மீண்டும் இந்தி குறித்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.