‘‘ஒரு ஆணின் வெற்றிக்கு பெண்....” கட்டா குஸ்தி வெற்றி விழாவில் பேசிய ஹீரோ...!

‘‘ஒரு ஆணின் வெற்றிக்கு பெண்....”  கட்டா குஸ்தி வெற்றி விழாவில் பேசிய ஹீரோ...!

நடிகர் விஷ்ணு விஷாலின் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவான கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இத்திரைப்படத்தை விஷ்ணு விஷாலும் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. 

காமெடி, ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா, சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. மேலும், நிகழ்சியில் படத்தின் இயக்குனர், நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், முனீஸ்காந்த், கஜராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அப்போது நடிகர் முனிஷ்காந்த் பேசியபோது, படத்தை நானும் என்னுடைய மனைவியும் பார்க்கும் போது, என்னுடைய மனைவி என்னிடம், ‘இது வெறும் படம் மட்டும்தானா’ என்று கேட்டார். ‘படத்தை படமா பாரு’ என்றேன். அந்த அளவிற்கு படத்தில் பெண்களுக்கான பாசிடிவான விஷயங்கள் படத்தில் உள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர், படத்தின் நீளம் மற்றும் நேர நிமித்ததால் பல காமெடி காட்சிகள் அகற்றப்பட்டுவிட்டன. அதை யூடியூபில் டெலிடட் காட்சிகளாக பதிவேற்றினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தார். 

தொடர்ந்து நடிகர் கஜராஜ் பேசியபோது, படகுழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், முண்டாசுபட்டி திரைப்படத்தில் நடித்த குழு இதிலும் அப்படியே நடித்திருக்கிறோம் என்றார். மேலும் படத்தின் வெற்றி ரசிகர்களாகிய உங்களிடம் தான் உள்ளது என்றார்.    

மேலும் நடிகை ஆனந்தி பேசியபோது,12 வருட சினிமாவில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் தான் முதன்முறையாக மேடையில் நின்றுள்ளேன் என்று கண் கலங்கி படகுழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அடுத்ததாக பேசிய நடிகர் காளி வெங்கட், ஒரு பார்வையாளர் தரப்பில் இருந்து சொல்கிறேன், பலரும் சொல்வார்கள் ஆனால் செயலில் காட்டமாட்டார்கள், விஷ்ணு விஷால் அதை சொல்லாமலே செய்து காட்டி இருகிறார் என கூறினார். தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, குழுவாக இணைந்து கிடைத்த வெற்றி தான் இந்த படம் என கூறி நன்றி தெரிவித்துகொண்டார். 

நடிகர் விஷ்ணு விஷால் பேசியபோது, ‘நான் இங்கு நிற்பதற்கு காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். என்னிடம் என் அப்பா சொன்னது இதுதான். அவர் ஒரு காவல் துறையை சார்ந்தவர், அவருக்கு உறுதுணையாக இருப்பது பத்திரிக்கையாளர்கள் தானாம், அதனால் எப்பொழுதும் பத்திரிக்கையாளர்களிடம் நட்பை வைத்திருக்க சொல்வார்’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எல்லா விதமான கருத்துக்களையும் வரவேற்கிறேன்.இந்த கதையை முதலில் தயாரிக்க காரணம், ஆணும் பெண்ணும் ஒன்று என சொன்னதால் அந்த கதை பிடித்திருந்தது. அதனால் தான் இந்த கதையை தயாரிக்கவும், நடிக்கவும் காரணமாக அமைந்தது. தனது அக்காதான் தான் இங்கு நிற்க காரணம். என் மகனுடைய அம்மா, தனது மனைவி போன்றோர்  ஒரு ஆணின் வெற்றிக்கு பெண்ணாகியவர்கள் துணையாக நிற்பார்கள் என்றார். மேலும், எப்ஐஆர் படத்திற்கு பிறகு இது என்னுடைய இரண்டாம் வெற்றி என்றும் தனக்கு 9 படம் தோல்வி அடைந்து, இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது 9 படங்கள் கையிருப்பு இருக்கிறது. தனக்கு மார்க்கெட் இல்லையென்று சொன்னார்கள், அதை இப்போது உடைத்திருக்கிறது இந்த படம் என்றும் கூறியுள்ளார்.

-- சுஜிதா ஜோதி


இதையும் படிக்க : நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை இழிவுபடுத்திய புகார்...! முன்னாள் ஊழியர் கைது...!