”நரகம் காத்துக்கொண்டிருக்கிறது” சரத் பவாருக்கு - சர்ச்சை பதிவிட்ட மராத்திய நடிகை கைது..!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறித்து மராத்திய நடிகை கேதகி சிதாலே ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கைது எய்யப்பட்டுள்ளார். 

”நரகம் காத்துக்கொண்டிருக்கிறது” சரத் பவாருக்கு - சர்ச்சை பதிவிட்ட மராத்திய நடிகை  கைது..!

மராத்திய நடிகையான கேதகி சித்தாலே இந்தி மற்றும் மராத்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு சத்திரபதி சிவாஜியை சமூக வலைதளத்தில் மேற்கோள்காட்டி சர்ச்சையில் சிக்கினார். இப்படி இருக்க தற்போது தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். 

இவர் அந்த பதிவில், இது வேறு நபர் எழுதியது என கூறி சரத்பவார் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், " "நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது" என பதிவிட்டுருந்தார். இது பெரிதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இவரின் இந்த பதிவிற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பலவேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த பிரச்சனை தலை தூக்கி சரத் பவார் குறித்து அவதூறு பேசிய நடிகையை கைது செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் மற்றும் பலர் கோரிக்கைகள் வைத்தனர்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிரஸ்டோ கூறுகையில், " சரத்பவாருக்கு எதிராக அவதூறு பரப்பி மலிவு விளம்பரத்தை பெற முடியும் என்பதை மராட்டிய பா.ஜ.கவிடம் இருந்து இந்த நடிகை கற்றிருப்பார் " என கூறியிருந்தார். மேலும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறுகையில், " சரத் பவாருடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை கொண்டுதான் போராடவேண்டும். இது போன்று அவதூறாகப் பதிவிடக்கூடாது" எனவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் அந்த நடிகையை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அங்கு கூடிய தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதனை தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மராத்திய நடிகையை கைது செய்தனர்.