ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை காணவில்லை - மீரா மிதுன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை காணவில்லை - மீரா மிதுன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

நடிகை மீரா மிதுன், மாடலிங் மற்றும் அழகுப் போட்டிகளில் பங்கேற்றது மட்டுமின்றி '8 தோட்டாக்கள்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகியப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

 'பிக் பாஸ் 3'ல் கலந்துக் கொண்டு 35 நாட்கள் தங்கினார். உள்ளே இருந்த நாட்கள் முழுவதும் சர்ச்சைகளால் கவனம் பெற்றார். 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்குப் பிறகு மீரா பல சர்ச்சைகளில் சிக்கினார்.

சூர்யா, ஜோதிகா, விஜய் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மீது சமூக வலைதளங்களில் தவறாக பேசி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து பட்டியல் பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டார் மீரா.

இந்நிலையில் மீரா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு 'பேய காணோம்' என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்த நிலையில், மீரா திடீரென தலைமறைவாகிவிட்டதாக படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீரா மிதுனுடன் வந்த ஆறு உதவியாளர்களையும் காணவில்லை எனவும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்தபொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இன்னும் இரண்டு நாட்களே வேலை பாக்கி உள்ள நிலையில், மீரா தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் என்றும், அவர் மீது திரையுலகின் அனைத்து அமைப்புகளிலும் புகார் அளிக்கப் போவதாகவும் இயக்குநர்  அன்பரசன் கூறியுள்ளார்.