என்றும் வாழட்டும் இசையும்...ஞானியும்... 80 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா...!

இளையராஜா.. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாய் தமிழ்த்திரையிசையின் அடையாளமாய் விளங்கி வரும் பெயர்தான் இது. எல்லாருக்குமானது இசை என்பதை அனுபவ ரீதியாக சாத்தியமாக்கிய இசைஞானி இன்று தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

என்றும் வாழட்டும் இசையும்...ஞானியும்... 80 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா...!

80-களில் தயாரிப்பாளர்கள் ஹீரோவை முடிவு செய்வதற்கு முன்னரே இசையமைப்பாளராக இளையராஜாவை முடிவு செய்துவிடுவார்கள். இவர் படத்தில் இருந்தால் படம் ஹிட் என்பது தமிழ் சினிமாவின் சென்டிமென்ட் மட்டுமல்ல... நம்பிக்கையும் கூட... 

சிலபேருக்கு மட்டுமே என இருந்த தமிழ் சினிமாவின் கரம் பிடித்து வீதிக்கு கூட்டி வந்தவர் இளையராஜா என்றால் மிகையில்லை...1976 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 6,500 பாடல்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா, ஆயிரம் படங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் என்னும் குக்கிராமத்து வீதிகளில் சிறுவனாய் ராசையா ஓடித்திரிந்த போது அந்த ஊர் அறிந்திருக்காது, ஒருநாள் உலகத்து சரித்திரத்தில் இந்த ஊரின் பெயரும் எழுதப்படும் என்று. 
 
14 வயதில் அண்ணன் பாவலர் வரதராஜன் இசைக்குழுவில் இணைந்து பத்து ஆண்டுகள் அந்த குழுவோடேயே பயணித்தார் இளையராஜா. அந்த குழுவில் இருக்கும் போதே ஜவகர்லால் நேருவின் மறைவுக்கு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய இரங்கற்பாவுக்கு முதன்முதலில் இசையமைத்தார். 

1968ல் இசை ஜாம்பவான் தன்ராஜ் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையறிவு வேறு பரிணாமம் அடைந்தது. கிடார், பியானோ என மேற்கத்திய இசைக்கருவிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1976 ஆம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் தயாரித்த அன்னக்கிளி படத்தில் முதன்முதலில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. முதல் படத்திலேயே மேற்கத்திய இசைக்கருவிகளைக் கொண்டு நாட்டுப்புற பாடல்ளுக்கு மெட்டசைத்து புதுமை இசையை அறிமுகம் செய்து அசத்தினார். இசையமைப்பாளராக அறிமுகமாகி பத்து ஆண்டுகளிலேயே இந்தியா முழுவதும் பேசப்படும் இசை இயக்குநராக புகழ் பெறத்தொடங்கினார் இளையராஜா. 

இந்திய இசை உலகில் முதன் முதலில் மேற்கத்திய பாரம்பரிய இசை இணக்கங்களையும், சுரங்களையும் பயன்படுத்தியவர் இளையராஜா தான். இவர் இசையமைக்கும் படங்களின் பின்னனி இசையும் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இதனால் இந்திய ரசிகர்களிடம் தனிக் கவனம் பெற வைத்தன. ஆஃப்ரோ டிரைபல், போஸா நோவா, டேன்ஸ் மியூசிக், டூ-வாப், ப்ளமிங்கோ, வெஸ்டரன் போல்க், ஜாஸ், மார்ச், பேதோஸ், பாப், சிக்டெலியா மற்றும் ராக் அன்ட ரோல் போன்ற பல வகையான இசைகளை இந்திய இசை உலகுக்கு, குறிப்பாக தமிழ் திரையிசைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் இளையராஜா. 

இசையில் தொடங்குதம்மா, சங்கத்தில் பாடாத கவிதை, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, தென்றல் வந்து தீண்டும் போது, என்னுள்ளே என்னுள்ளே... ’ ஆகிய பாடல்களின் அழகியலையும், அந்த இசையுடன் இயைந்த சொற்கள் தரும் மயக்கத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

சாஸ்திரிய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை, நாடடுப்புற பாடல், தாலாட்டு, ஒப்பாரி என இசையின் அத்தனை வடிவங்களையும் இசைக்கோவையில் அருமையாக கலக்கத் தெரிந்த வித்தகர் தான் இளையராஜா. இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், இவர் குரலிலில் பாடல்களும் வெளிவந்திருக்கிறது. அந்தக்குரல்.. வேதனையால் அழும் மனங்களுக்கு மருந்து... காதலால் கசிந்துருகும் இதயங்களுக்கு விருந்து...பக்தி மேவும் ஆன்மீகர்களுக்கு தியானம்...துள்ளிக்குதிக்கும் இளைஞர்களுக்கு ஆனந்தம்... இப்படி ஒருவரால் பல அவதாரம் எடுக்க முடியுமென்பதை தன் இசையால் மெய்ப்பித்துக் காட்டியவர் இளையராஜா...

இந்திய அரசாங்கத்தால் திரைத்துறை கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். சிறந்த இசை இயக்குனராக மூன்று முறையும், சிறந்த பின்னனி இசைக்காக இரண்டு முறையும் விருது பெற்றுள்ளார். 2010ல் இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

1970களில் தொடங்கி இப்போது வரை இசையின் மூலம் அனைவரையும் கட்டுப்படுத்த முடியுமென்றால் அது இளையராஜாவால் மட்டுமே சாத்தியம். காற்றும், காதலும் உள்ள வரை இளையராஜாவின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.