ரோகிணி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது - நடிகர் சூரி கண்டனம்

ரோகிணி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது - நடிகர் சூரி கண்டனம்

ரோகிணி திரையரங்க சம்பவம் வருத்தமளிப்பதாக நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ”பத்து தல” படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்றைய தினம் திரையரங்குகளில் பிரமாண்டமாக திரைப்படம் வெளியானது.  படத்தை பார்ப்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், ‘பத்து தல’ படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரையரங்கிற்கு குழந்தையுடன் சென்ற நரிகுறவ பெண் ஒருவர், திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்த பெண் கையில் டிக்கெட் வைத்திருப்பதாக கூறிய பின்னரும் அவர்கள் அனுமதிக்கப்படாதது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பையடுத்து, அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!

இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திரைபிரபலங்கள் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றி மாறன், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளதுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூரியும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். 

மதுரையில் விடுதலை திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த நடிகர் சூரி, முன்னதாக ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது திரையரங்குகள் எனவும், இச்சம்பவம் எந்த சூழலில் நடந்தது என்பது தெரியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.