ரூ. 10 கோடி இழப்பீடு கோரி ஏ.ஆர். ரகுமான் நோட்டீஸ்..!

ரூ. 10 கோடி இழப்பீடு கோரி ஏ.ஆர். ரகுமான் நோட்டீஸ்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்  ஆனால் அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ. 29.50 லட்சத்தை திரும் கேட்டபோது, முன்தேதியிட்ட காசோலையை ரஹ்மான் வழங்கியும், பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ரஹ்மான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம்   சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுசம்பந்தமாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என்றும், 
அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அசிக்கான் அமைப்புட்ன ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம்  தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக  பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும்  படிக்க   | அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி ..!