புதுமுக இயக்குநரின் அரசியல் கதையில் செல்வராகவன்!!

புதுமுக இயக்குநரின் அரசியல் கதையில் செல்வராகவன்!!

புதுமுக இயக்குநர் ரெங்கநாதனின் இயக்கத்தில், செல்வராகவன், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் நடிக்கும் புதிய திரைப்படம், தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்டதாக இருக்கும் என இயக்குநர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி, அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி," என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்," என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || வாழ்க்கையின் கடினமான பகுதி குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென்!