தெரியாது! தெரியாது! தெரியாது!- புகார் அளித்து விட்டு, யார் மீது புகார் எனக் கூறாமல் மழுப்பிய சினேகன்:

தனது அறக்கட்டளையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய நடிகை மீது, சினேகன் புகார் அளித்து, பின், அது யார் என்ற தகவலைப் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லாமல் மழுப்பியதால், சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

தெரியாது! தெரியாது! தெரியாது!- புகார் அளித்து விட்டு, யார் மீது புகார் எனக் கூறாமல் மழுப்பிய சினேகன்:

கவிஞர் சினேகன் என்றாலே, பல சர்ச்சைகள் ரக ரகமாக தொடர்கிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாசில் களமிறங்கி, பலரது மனதைக் கவர்ந்திழுத்தாலும், கட்டிப் பிடி வைத்தியம் மூலமே, அவர் இன்று வரை மக்கள் மத்தியில் அறியப்படுகிறார் என்பது யாராலும் மறுக்க முடியாதது.

தொண்டுகள் செய்யும் கவிஞன்:

ஆனால், எவ்வளவு தான் இது போன்ற சிறு சிறு சர்ச்சைகள் வந்தாலும், அவரது தமிழுக்கும், அவரது தொண்டுகளுக்கும், தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ‘சினேகம் ஃபௌண்டேஷன்’ என்ற பெயரில் அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம், பல வகையான மக்கள் நலத் தொண்டுகளை அவ்வப்போது செய்து வரும் சினேகனுக்கு, தற்போது ஒரு பெரும் சோதனை வந்துள்ளது.

தொண்டுக்கு பணமா?

2015ம் ஆண்டு தொடங்கிய இந்த தொண்டு நிறுவனமானது, அரசு சான்றிதழ் பெற்று இயங்கும் ஒரு நிறுவனமாக இருக்கும் நிலையில், அவர் செய்து வரும் தொண்டுகளின் தகவல்களையும், அவரது நிறுவனத்தின் பேரையும் வைத்து போலி கணக்குகள் சோசியல் மீடியாக்களில் உருவாக்கி, யாரோ ஒருவர் பணம் பெற்றிருக்கிறார். இது தொடர்பாக, சினேகனைக் கேள்வி எழுப்பிய அவரது சுற்றத்தார், நடப்பதை அவருக்குத் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து, அந்த பக்கங்களில் கொடுக்கப்பட்ட போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, அவரிடம் ஒரு பெண் பேசியிருக்கிறார்.

போலி கணக்குத் தொடங்கிய நடிகை:

அவரது நிறுவனத்திற்கு பணம் கொடுக்க விரும்புவதாக வலை விரித்த சினேகனிடம் பேசியவர், “இந்த பேஸ்புக் பக்கத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு வர வேண்டாம். தனியாக வேறு எங்காவது சந்திப்போம்” என்று கூறியிருக்கிறார். மேலும், அந்த நபர் தனியாக வேறு வரச் சொல்லிக் கேட்டதால், சந்தேகம் ஊர்ஜிதமானதை அடுத்து, தனியாக சென்றால், ஏதேனும் பிரச்சனை ஆகி விடுமோ என்ற பயத்தில், உடனே தனது வழக்கறிஞர் மூலம், சட்டபடியாக அணுகியும் எந்த பயனும் இல்லாத காரணத்தால், காவல் துறையிடம் சென்றுள்ளார் சினேகன்.

வேறு வழியின்றி புகார்:

தனது ‘சினேகம் ஃபௌண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தின் பெயரில் பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவர், யூ-டியூப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்து வருவதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் புகார் மனு அளித்திருக்கிறார்.

என்ன புகார்?

2015இல் தொடங்கிய இந்த சினேகம் ஃபௌண்டேஷன் தொண்டு நிறுவனம், வருமான வரித்துறை அங்கீகரித்து 12AA சான்றும், வரிவிலக்கும் வழங்கியது என்று தெரிவித்தார். தொடர்ந்து தொண்டுகளை சிறப்பாக செய்து வருவதாகக் கூறி, இது போன்ற நிறுவனத்தை நடத்துபவர்கள், அதற்கான கணக்கு வழக்குகளை முறையாக வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சமீபத்தில் தனது சினேகம் ஃபௌண்டேஷன் பெயரில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கணக்கு வழக்குகள் தொடர்பான விவரங்களைக் கேட்டு தன்னை அணுகியதாகவும், தான் அவ்வாறு எந்த பணமும் வசூலிக்கவில்லை எனக்கூறியதாகவும் தெரிவித்தார்.

அதிகாரிகள் சொல்லித் தான் எனக்கே தெரியும்!

அவர் கூறியதைக் கேட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள், “சமூக வலைத்தளங்களில் உங்கள் தொண்டு நிறுவனம் பெயரில் நிதி வசூலிக்கப்படுகிறது” எனக் கூறிய பின்னே, இது தனது கவனத்திற்கு வந்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை:

அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்து, அது உண்மை எனத் தெரிந்துக் கொண்டதாகவும், வழக்கறிஞர் மூலம் சட்டப்படி அந்த நபரை அணுகி, எந்த பயனும் இல்லாததாகவும் தெரிவித்த சினேகன், இறுதியாக போலீசிடம் வந்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த நடிகை?

சமூக வலைதளத்தில் ஆராய்ந்தபோது, சினேகம் ஃபௌண்டேஷனின் நிறுவனர் எனக்கூறி, பிரபல சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் முகம் போட்டு,  யூ-டியூப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில், போலி கணக்கு தொடங்கி போலியான முகவரி மற்றும் விவரங்களைக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இந்த பெயரைப் பயன்படுத்தி, அந்த போலி கணக்கு பணம் வசூலித்துள்ளதால், ஏமாற்றி பணம் வசூலிக்கும் குற்றத்திற்காக நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் சினேகன் குறிப்பிட்டுள்ளார்.

Tamil TV Actress Jayalakshmi Offered 3 Lakh Per Day for High-Profile Clients

ஆடு திருடினது யாரு?

பிரபல வடிவேலு நகைச்சுவையில் வருவது போல, சினேகன் செய்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தனது புகாரில் கொட்டை எழுத்துகளில் நடிகை ஜெயலட்சுமி என்ற பெயர் கொடுத்தப் பிறகும், அவர்தானா என்பது சரியாக தெரியவில்லை என செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியிருக்கிறார் சொல்லரசன் சினேகன்.

இருட்டுல சரியா தெரியலங்க:

புகார் கொடுத்து விட்டு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது, புகார் மனுவில் இருந்த அத்தனை வார்த்தைகளையும் ஒப்பித்தார். பின், இந்த மோசடி செய்தது யார் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்காமல், மழுப்பியுள்ளார். பின், சரியாக யார் என்று தெரியவில்லை என்று வேறு கூறியுள்ளார்.

நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு:

புகாரில் நடிகை ஜெயலட்சுமி பெயர் இருப்பதை வைத்து மீண்டும் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த கணக்குகளில் நடிகை ஜெயலட்சுமியின் பெயர் மற்றும் படங்கள் இருப்பதால் தான் புகார் அளித்துள்ளதாகவும், தான் நேரில் சென்று அவரிடம் கேட்காததால், அவர் தான் இதற்கு பின்னணியில் இருக்கிறாரா எனத் தெரியாது என்றும் பகிரங்கமாக மழுப்பியுள்ளார். மேலும், புகாரில் தெரிவித்தது போல, தனியாக வரச் சொன்னதால் நேரில் சந்திக்கத் தவிர்த்ததாகவும் தெரிவித்த சினேகன், உண்மையில் இதை செய்தது அவர்தானா என தனக்கு உறுதியாக தெரியாது எனக் கூறியுள்ளார்.

முழுமையாக நனைந்த பின் முக்காடு:

புகார் மனுவில் வெளிப்படையாக நடிகை ஜெயலட்சுமியை குற்றம் சாட்டிவிட்டு, சட்டப்படியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து, கேள்வி கேட்டால், பஞ்சாயத்தில் பயப்படுவது போல சினேகன் கூறிய பதில், தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

- செய்தியாளர் மனோஜ்