"12 மணி நேரம் உயிரோடு இருக்க நயன் சொல்லும் அட்வைஸ்” - வெளியானது ‘o2’ படத்தின் டீசர்! இணையத்தில் வைரல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன் நடிக்கும் ‘o2’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

"12 மணி நேரம் உயிரோடு இருக்க நயன் சொல்லும் அட்வைஸ்” - வெளியானது  ‘o2’ படத்தின் டீசர்! இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நடிகை நயன்தாரா ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘O2' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.கே.விக்னேஷ் இயக்கியுள்ளார். உதவி இயக்குனராக பணியாற்றிய இவரின் முதல் படமே திரில்லர் திரைப்படமாக அமைந்திருப்பது குறிப்பிடதக்கது.

நடிகை நயன்தாரா, அவரின் மகளாக சமீபத்தில் குழந்தை ஒன்று செய்திவாசிப்பாளராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ரித்விக் உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.  

இந்நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டீசரை ‘O2' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த டீசரில் ஒரு முழு பேருந்தும் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. அதனால் பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால், சுவாச பிரச்சனைக்காக எப்போதும் தன் மகளுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை  பேருந்தில் இருக்கும் சக பயணிகள் குறி வைப்பதை அம்மாவான நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை.

அதிலும் ”பதட்டப்படாமல், அமைதியாக சண்டைபோடாமல் இருந்தால் 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம்” என நயன்தாரா அவர் குழந்தையை கையில் வைத்து கொண்டு பேசும் வசனம் பார்ப்போரிடம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல் படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.