பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு...!

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு...!
Published on
Updated on
1 min read

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கத்திலும், அவரது நடிப்பிலும் உருவாகியுள்ள ”பிச்சைக்காரன் 2” படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகர் ஆர். பாண்டியராஜன் நடிப்பில் உருவான ’ஆய்வுக்கூடம்’ என்ற படத்தை தங்களது தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டது. அப்படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து  விஜய் ஆண்டனி படத்தை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, ”ஆய்வுக்கூடம்” படம் குறித்த எந்த தகவலும் தமக்கு தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடரப்பட்ட பின்னரே, அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார். 

இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சவுந்தர், பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதே வேளையில், படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com