40 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்...!

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

40 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்...!

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  பின்னர் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார். 

முன்னதாக, ஸ்ரீவஸ்தவாவின் மூத்த மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்பாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இதனை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து 40 நாட்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த அவருக்கு வயது 58

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜு ஸ்ரீவஸ்தவா சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கினார். அவர் மிக விரைவில் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அவரது செழுமையான பணிகளால்  எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள் என தெரிவித்துள்ளார். 

ராஜு ஸ்ரீவஸ்தவா மைனே பியார் கியா, பாசிகர், ஆம்டானி அத்தாணி கார்ச்சா ருபையா, பிக் பிரதர், பாம்பே டு கோவா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.