பிரபு சாலமனுடன் வாக்குவாதம்.. எடுத்ததோ செம்பி... வந்ததோ சங்கி..

செம்பி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பத்திரிக்கையாளர்கள் இயக்குநரிடம் சரமாரி கேள்விகளைக் கேட்டு நிலைகுலையச் செய்துள்ளனர்.
பிரபு சாலமனுடன் வாக்குவாதம்..  எடுத்ததோ செம்பி... வந்ததோ சங்கி..

கோவை சரளா, அஷ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் செம்பி. மைனா, கும்கி, தொடரி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பிரபுசாலமனின் அடுத்த படைப்பாக வெளியான செம்பி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

திரையரங்குகளில் படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பாராட்டியே வந்தாலும், செம்பி படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களின் கண்களில் வாக்கியம் ஒன்று கண்ணில் பட்டது. 

செம்பி திரைப்படத்தின் இறுதியில் இயேசு குறித்த வாக்கியம் ஒன்று போடப்பட்டிருந்தது. அதாவது உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்திலும் செலுத்து - இயேசு.. என்ற வார்த்தையைக் கண்டு அதிருப்தியடைந்த பத்திரிக்கையாளர்கள் பிரபுசாலமனிடம் சீறியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மைனா, கும்கி ஆகிய திரைப்படங்களின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த பிரபுசாலமன், கயல் படத்தில் இருந்தே மதப் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பதே பலரது குற்றச்சாட்டாய் உள்ளது. கயல் படத்தின் கதாநாயகனின் பின்னணி, படத்தின் இறுதியில் கிறிஸ்துமஸ் தின விழாக்களைக் காட்டியது, ஒரு கேமரா ஆங்கிளில் கூட தேவாலய கோபுரத்தை காட்டி மதத்தை வளர்ப்பதாக விமர்சனம் செய்து வந்தனர். 

கயல் படத்தைத் தொடர்ந்து, தொடரி, ரூபாய் ஆகிய திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் மறைமுகமாக மதப்பிரசாரத்தை செய்து வந்தவர், செம்பியில் நேரடியாகவே கிறிஸ்தவ மதத்திற்கு மணியடிக்க தொடங்கி விட்டார் என்பதே பலரது குற்றச்சாட்டு. இந்த மதப்பிரசாரம் திரைப்பட இயக்குநருக்கு எதற்கு என்பதே பத்திரிக்கையாளர்களின் கேள்வி.. 

இதனால் சில நிமிடங்கள் கடும் பரபரப்பு நிலவியதையடுத்து குறுக்கே புகுந்த கோவை சரளா அனைவரது கவனத்தையும் திசைதிருப்ப ஒருவழியாக பிரச்சினை சுமூகமாக முடிந்தது. ஒரு திரைப்படத்தை உருவாக்கியதிலும், மக்களை சென்றடைய வைப்பதிலும் பிரபுசாலமன் தலைசிறந்த இயக்குநர் என்றே கைதட்டல்களை பெற்றிருந்தாலும், திரைப்படத்தை மதப்பிரசாரம் செய்யும் ஊடகமாக நினைத்துக் கொள்கிறாரே? என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. 

யாராக இருந்தாலும், தங்கள் மதத்தை பின்பற்றுவதோடு, அதனை பிறர் மனதிலும் அழுத்தம் கொடுத்து பரப்பும் வேலையைச் செய்தால் அவரும் சங்கியே.. ஆக மொத்தம் பிரபுசாலமன் எடுத்தது செம்பி.. ஆனால் வந்தது சங்கி..

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com