வெற்றிமாறன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு...!!!

வெற்றிமாறன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு...!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை திரைப்படம் வருகிற மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.   நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்துள்ளார்.  படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.

விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் வெற்றிமாறன்.  அப்படத்தின் முதல் பாகம் தான் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது.   இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.  படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.   அந்த வகையில் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி விடுதலை படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் ஏ சான்றிதழ் பெறும் மூன்றாவது படமாக விடுதலை உள்ளது.   இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், வடசென்னை ஆகிய படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இப்படத்தில் சில ஆபாச வசனங்கள் அல்லது காட்சிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  விடுதலை படத்தின் திரைக்கதைக்கு தேவைப்படும் அந்த காட்சிகளுக்கு கத்திரிபோட வெற்றிமாறன் விரும்பாததால் சென்சார் போர்டு அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இப்படம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com