திரைப்பட தயாரிப்பாளர் தேர்தல்.... விசாரணைக்கு வந்த வழக்கு.....

திரைப்பட தயாரிப்பாளர் தேர்தல்.... விசாரணைக்கு வந்த வழக்கு.....

தேர்தல் நடத்தும் அலுவலராக யார் நியமிக்கப்பட உள்ளார் என தெரிவிக்கும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையுலக தேர்தல்:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு:

இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், அறிவிப்புக்கு தடை விதித்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், கவுன்சிலின் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

விசாரணை:

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, சங்க துணை விதிகளின்படி தேர்தல் நடத்தும் அலுவலரை நீதிமன்றம் தான் நியமிக்க வேண்டுமே தவிர, தேர்தல் அலுவலரை கவுன்சிலே நியமித்து தேர்தலை நடத்த முடியாது என வாதிட்டார்.  மேலும் வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

கால அவகாச கோரிக்கை:

தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணா ஆஜராகி, தேர்தல் நடத்தும் அலுவலராக யாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை பெற்று தெரிவிப்பதாக கூறி அவகாசம் கோரியுள்ளார்.
 
இதனையடுத்து வழக்கின்  விசாரணையை நாளை மறுநாளுக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com