விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல்லில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராகி உள்ளன.
நாடு முழுதும் ஆண்டும் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும், பலவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்து, நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம்.
நகர பகுதிகள் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் சிலைகளை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்று பூஜைகளும் செய்வார்கள்.
இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக முன்கூட்டியே விநாயகர் சிலை ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. இதற்காக களிமண், கிழங்கு மாவில் தயார் செய்யப்பட்ட அரை அடி முதல் 15 அடி உயரமுள்ள பல வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு சிங்கம், மயில், மான், எலி போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும் பாலவிநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர், ஆனந்த. விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விநாயகர் செய்யப்பட்டு உயரத்திற்கு ஏற்றவாறு 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து சிலை வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து சிலை தயாரிப்பாளர் பிரபாகரன் கூறுகையில், " மூன்று தலைமுறைகளாக விநாயகர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 15 அடி கொண்ட விநாயகர் சிலை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை தான் விற்பனை செய்து வந்தோம். ஆனால் விநாயகர் சிலை செய்வதற்கு தேவையான மூலப் பொருட்கள், பெயிண்ட் போன்றவையின் இரு மடங்கு விலை ஏற்றத்தாலும், ஆட்கள் கூலி 600 ரூபாய் வரை உயர்ந்ததாலும் அதிகபட்சமாக செய்யப்படும் 15 அடி கொண்ட விநாயகர் சிலை 20 ஆயிரம் வரை விற்று வந்த நிலையில் தற்போது 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" . இதனால் விற்பனையும் சற்று சரிந்துள்ளதாக தெரிவிக்கின்றார்.
இதையும் படிக்க | ஜி -20 மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லிக்கு பயணிக்கும் நடராஜர் சிலை...!