உன் வாலைச் சுருட்டிடு... ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளதா லியோ செகண்ட் சிங்கிள் !!

நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் இரண்டாவது பாடல் வெளியான நிலையில், இதில் இடம் பெற்ற சில வரிகள் ரசிகர்களின் கவனிப்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

பொதுவாக விஜய் படம் வெளியாகிறதென்றால் அதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழா நடத்தப்படும். அதில் விஜய்யின் குட்டி ஸ்டோரியும் ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் பெறும். இசை வெளியீட்டு விழாவென்றபோதும், அரசியல் குறித்த தன் நிலைப்பாட்டை பேசி ரசிகர்களை தயார் படுத்துவார். 

இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்தானதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. 

லியோ இசை வெளியீட்டு விழாவுக்காக டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு, மேடைகள் தயாராகி வந்த நிலையில் எல்லாமே அப்படியே நிறுத்தப்பட்டது. இதற்கு அரசியல் நெருக்கடியே காரணம் என விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கண்டனம் விடுத்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ரத்தானதாகவும், அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்தது. 

இதையடுத்து ரசிகர்கள் வெளியீட்டு தேதியை எதிர்நோக்கி வந்த வேளையில், இரண்டாம் சிங்கிள் பாடலான பேட் டாஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதன் முதல் வரியிலேயே சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து, இவன் வேட்டைக்கு சிதணும் பயந்து என போட்டு தெறியை கிளப்பியுள்ளார் விஜய். பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து குடலுறுவும் சம்பவம் உறுதி என்ற பாடலின் வரிகள் யாரை குறிக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுவரை நல்லவன் இருந்தான் என்றும், நெருங்காத நீ.. முறைக்காத நீ.. உரசாம ஓடிடு.. உன் வாலைச் சுருட்டிடு என வரிகள் யாரையோ பதம் பார்ப்பதற்காக எழுதப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றன.

முக்கியமாக பல ராஜாக்களை பார்த்தாச்சு, நூறு பஞ்சாயத்தை தீர்த்தாச்சு என்ற வரிகள் விஜய்யின் கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்தும், அரசியல் வருகைக்கான அடையாளமாகவே பார்க்கப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இசை வெளியீட்டு விழா நடக்கவில்லையே என ஆக்ரோஷத்தில் பொங்கிய விஜய் ரசிகர்களுக்கு லியோ படத்தின் பாடல் வரிகள் அருமருந்தாக அமைந்துள்ளதாக பெருமூச்சு விட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com