மாணவர்களுக்காக இரவு பாடசாலை, வீடு இல்லாத மக்களுக்காக வீடுகள், குடிசை வீடுகள் சீரமைப்பு என்று இசையமைப்பாளர் டி இமானின் சமீபத்திய செயல்பாடுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இசையமைப்பாளராக தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி தடத்தை பதித்தவர் டி இமான். திறமைசாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதை தவறாமல் செய்து வரும் நபர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். விசுவாசம் படத்தில் வந்த 'கண்ணான கண்ணே' பாடலை பார்வை திறனற்ற இளைஞர் திருமூர்த்தி பாடி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதனை பார்த்த இமான் அவரை அழைத்து பாராட்டி அவருக்கு இசைப்பயிற்சி கொடுத்து தனது இசைக்குழுவிலும் பணியாற்ற வாய்ப்பளித்தார். திருமூர்த்தியை தொடர்ந்து ரயிலில் பாடும் பெண் ஒருவரையும் தேடி வந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் கான்டாக்ட் நம்பர் கிடைக்குமா என இமான் கேட்டிருந்தார்.
இவ்வாறாக திரைத்துறையில் பல்வேறு திறமைசாளிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் நிலையில்... இவரின் கல்வி மற்றும் சேவை சார்ந்த சமீபத்திய செயல்பாடுகள் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சி பகுதியில் 20 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்காக 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு குடும்பங்களுக்காக குடிசை வீடுகள், மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் , மாணவர்களுக்காக இலவச நோட்டு புத்தகங்கள் மற்றூம் இரவு பாடசாலையை துவங்கி வைத்துள்ளார்.
இந்த விழாவிற்காக வருகை தந்திருந்த இசையமைப்பாளர் டி இமானை அப்பகுதி மக்கள் மணி மாலை அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்.. "நீங்கள் யார் என்ற அடையாளத்தை மாற்றி சமூகத்தில் உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி தருவது கல்வி தான்", என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.... நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன்... நான் மதம் பரப்புவதற்காக இங்கு வரவில்லை என்றும் ஒரு சமூக ஆர்வலராக தான் வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார். மேலும் நான் சம்பாதிப்பதில் 10 ல் ஒரு பங்கு இறைபணிக்காக செலவு செய்து வருகிறேன்.. இந்த பணிகளை எல்லாம் இறைபணியாக நினைத்து செய்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விருதுகள், இரவு பாடசாலை என்று கல்வி சார்ந்த செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் வரிசையில் இசையமைபாளர் டி இமானின் கல்வி மற்றும் சேவை சார்ந்த இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஆதரவின்றி இறந்த துனை நடிகர் பிரபுவின் இறுதி சடங்குகளை இமான் முன் நின்று செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.