1996-ம் ஆண்டு கமல்ஹாசன், சுஹாசினி, மனிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமனி, செந்தில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தப்படம் இந்தியன். சுதந்திரப் போராட்ட தியாகி மற்றும் அவருடைய மகன் என இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார் கமல்ஹாசன். ஊழலில் ஊறிப் போனவர்களை கண்டுப்பிடித்து கொலை செய்யும் சுதந்திரப் போராட்ட தந்தை, ஊழலுக்கு துணை நிற்கும் மகன் என வித்தியாசமான கதை களத்தில் உருவாகி, 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்தது.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயாரானது படக்குழு. 2018-ம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கி 2019-ம் ஆண்டு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கமல் ரியாலிட்டி ஷோ, அரசியல் என பிசியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது.
பிறகு 2019-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுயோவில் படப்பிடிப்பு நடந்த போது, ட்ரேன் விழுந்து துணை இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு லைகா புரொடக்சன், கமல், சங்கர் என அனைவரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
தனது இறுதி படமாக இந்தியன்-2 இருக்கும் என கமல் அறிவித்த நிலையில், படப்பிடிப்பும் பாதியில் விபத்தால் நின்றதால், தேர்தல் வேலைகளை மும்முரமாக செய்து வந்தார் கமல். சங்கரும் அடுத்ததாக ஹிந்தியில் அந்நியன் படத்தை ரீமெக் செய்து வெளியிடும் பணியை செய்தார். தேர்தலும் முடிந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில் இந்தியன்-2 படத்தை முடிக்காமல் சங்கர் வேறு படங்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் நீதிமன்றம் சென்றது.
ஆனால் சங்கர் பிற மொழி படங்களை இயக்க தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. இந்த நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். ராம் சரண், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ ஆகியோர் சென்னை வந்து சங்கரை சந்தித்து படப்பிடிப்பை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி, செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். கமலும் இப்படத்தை கண்டுகொள்ளாது விக்ரம் என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனால் இந்தியன்-2 படத்தின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.