தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், நேற்று தனது 39 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்நிலையில் சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு துபாய் சென்றிருந்ததாகவும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு சிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
சமீப காலமாகவே துபாய் அரசு தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு தங்களுடைய கோல்டன் விசாவை தொடர்ந்து வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வரிசையில் நடிகை த்ரிஷா, லட்சுமி ராய், மீரா ஜாஸ்மின், அமலாபால், நடிகர் பார்த்திபன் போன்றோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் சிம்புவுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட சிம்பு துபாயிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ புகைப்படம் எதுவும் வெளிவராத நிலையில், பிறந்த நாள் பரிசாக கோல்டன் விசாவை பெற்ற சிம்புவுக்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.