அட இப்படியா ஏமாற்றுவார்கள் - கோடி கணக்கில் பணத்தை இழந்த பிரபல இயக்குநர்!!!

அட இப்படியா ஏமாற்றுவார்கள் - கோடி கணக்கில் பணத்தை இழந்த  பிரபல இயக்குநர்!!!
Published on
Updated on
2 min read

தமிழில் பிரபல இயக்குநராக இருப்பவர் பாண்டிராஜ். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'பசங்க' படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குநராக அறியப்பட்டவர் பாண்டிராஜ். அவரது முதல் படத்துக்கே பல்வேறு விருதுகளை பெற்றார். அருள்நிதியின் 'வம்சம்', சிவகார்திகேயனின் 'மெரினா', கேடி பில்லா கில்லாடி ரங்கா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட அநேக ஹிட் படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி குமார் என்பவர் ரூ.1.89 கோடி மோசடி செய்துள்ளதாக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில், "புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் என்பவர், வெள்ளனூர் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தில், 27 சென்ட் நிலத்தை தனக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விற்பனை செய்வதாக முதலில் 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். பின்னர், அதே பட்டா எண் கொண்ட (481) நிலத்தின் மற்றொரு பகுதியில் இருந்து 54 சென்ட் நிலத்தை தன்னிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 12 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்தேன். ஆனால், அந்த 2 நிலங்களையும் எனது பெயருக்கு இன்னும் அவர் பதிவு செய்யவில்லை

கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக குமார், என்னிடம் மூன்று லட்ச ரூபாய் வாங்கினார். அதன்பின் காரைக்குடியில் துணிக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்றுக்கூறி 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கினார். அதன்பின்பு கடந்த 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில், 69 ஆயிரத்து 840 சதுர அடி வீட்டு மனை பட்டா அவரிடம் இருப்பதாக சொல்லி, அதை எனக்கு எழுதி தருவதாக கூறினார். அதற்காக இரண்டு தவணைகளாக ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார். இதேபோல் ஐந்து தவணைகளாக என்னிடம் நிலம் விற்பனை செய்வதாக குமார் மொத்தம் ரூ.1 கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் பெற்றுக் கொண்டு நிலம் ஏதும் தனக்கு பத்திர பதிவு செய்யாமல் மோசடி செய்து விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாண்டிராஜின் புகாரின் அடிப்படையில் குமார் மீது வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலிசார், அவரை கைது செய்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நிலம் வாங்கி தருவதாக கூறி இயக்குநர் பாண்டிராஜிடம் ரூ.1.89 கோடி பணத்தை வாலிபர் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com