'பூக்காத ரோஜாக்கள்' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

'பூக்காத ரோஜாக்கள்' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

உதகை ரோஜா பூங்காவில் நாளை 18வது ரோஜா கண்காட்சி துவங்க உள்ள நிலையில் பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் நிலவும் இதமான கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல் உதகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் கோடை சீசனை ஒட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் பனிரெண்டாவது காய்கறி கண்காட்சி கடந்த ஆறாம் தேதி துவங்கிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்று உதகை படகு இல்லத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்ட நூறாண்டுகள் கடந்ததன் நினைவாக உதகை ரோஜா பூங்கா அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோஜா பூங்காவில் கிட்டத்தட்ட 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பராமரிக்கப்பட்டு வரும் ரோஜா பூங்காவின் கோடை விழாவின் ஒரு பகுதியாக 18வது ரோஜா கண்காட்சி மே 13ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சிக்காக பூங்காவை தயார்படுத்தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ரோஜா பூங்காவில் நுழைவாயில் அருகே அமைந்துள்ள மில் தளத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான ரோஜா செடிகளில் மலர்கள் பூக்காததால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாளை உதகை ரோஜா பூங்காவில் 18வது ரோஜா கண்காட்சி நடைபெறும் நிலையில் ரோஜா மலர்கள் பூக்காதது பெரும் ஏமாற்றத்தை தருவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com