மக்களாகிய நீங்கள் சொன்னால் அதை செய்துமுடிக்க தான் தயாராக இருப்பதாக லியோ திரைப்பட வெற்றி விழாவில் நடிகா் விஜய் தொிவித்துள்ளாா்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் நடிகா் விஜய் பங்கேற்று மேடையில் பேசுகையில், "யாரையும் புண்படுத்துவது நமது வேலை இல்லை. அகிம்சைதான் உண்மையான, வலிமையான ஆயுதம்" என தொிவித்தாா்.
தொடா்ந்து பேசிய அவா், எதை வெற்றிபெற முடியாதோ அதை வெற்றி பெற வேண்டும் அதுதான் முக்கியம் எனவும், சினிமாவில் புரட்சித் தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல என்றால் அனைத்திற்கும் ஒருவர் தான் எனவும் குறிப்பிட்டாா்.
மேலும் மக்களாகிய நீங்கள் தான் மன்னர், நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி எனக்குறிப்பிட்ட நடிகா் விஜய், நீங்கள் ஆணையிட்டால் அதை செய்து முடிக்க தயாராக இருப்பதாக தொிவித்தாா்.
தொடா்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளா் கேட்ட கேள்விக்கு, 2026-ஆம் ஆண்டை பொறுத்தவரை "கப்பு முக்கியம் பிகிலு" என பதிலளித்தாா்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜுன், நடிகர் விஜய் நல்ல listener, யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார், அதற்கு தன் செயலால் தான் பதில் சொல்வார். கூடிய விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று குறிப்பிட்டார்.
தொடா்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், சமூகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி விட்டது எனவும், போதை பொருள் குறித்து விழிப்புணா்வு விஜய், கமல், சூர்யா, கார்த்தி போன்ற பெரிய நடிகா்கள் சொன்னால் மக்களிடம் அதிகமாக போய் சேரும் என்பதே இத்திரைப்படத்தை இயக்கியதற்கு காரணம் எனவும் தொிவித்தாா்.